PulseNews
அரசியல்

முந்தைய ஆட்சிக்கால வழக்குகளை திரும்பப் பெறுவதாக முதல்வர் விஜய் அறிவிப்பு: சட்டப்பேரவையில் காரசார விவாதம்

2021 மே முதல் 2026 ஏப்ரல் வரையிலான முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில், விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறி…

PulseNews ஆசிரியர் குழு7 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
முந்தைய ஆட்சிக்கால வழக்குகளை திரும்பப் பெறுவதாக முதல்வர் விஜய் அறிவிப்பு: சட்டப்பேரவையில் காரசார விவாதம்

2021 மே முதல் 2026 ஏப்ரல் வரையிலான முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில், விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதில் திருவண்ணாமலை சிப்காட் மற்றும் பரந்தூர் விமான நிலையத் திட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களால் தொடரப்பட்ட வழக்குகளும் அடங்கும்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு திமுக கொறடா எ.வ.வேலு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முந்தைய ஆட்சிக்காலத்தில் தான் வழக்குகள் பதியப்பட்டதாக முதலமைச்சர் உள்நோக்கத்துடன் குறிப்பிட்டதாக அவர் விமர்சித்ததுடன், தற்போது தவெக ஆட்சியில் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளும் ரத்து செய்யப்படுமா என சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, திமுக ஆட்சிக்காலத்தின் போது பல்வேறு போராட்டங்களுக்காகப் போடப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் குறிப்பிட்டார். குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் சட்டங்கள், 8 வழிச் சாலைத் திட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மீத்தேன் ஹைட்ரோகார்பன் திட்டம் போன்றவற்றுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளே அவ்வாறு வாபஸ் பெறப்பட்டதாக அவர் விளக்கமளித்தார்.

#politics#editorial